தல இருப்பிடச் சிறப்பு

தல இருப்பிடச் சிறப்பு

"தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என்றார் மாணிக்கவாசகப் பெருமான். தென்னாடு என்பதற்கு அவர் குறித்த பொருள் எதுவாயினும் நம் தென்னாடு சிவாலயங்கள் மிக்கது. வளமும் வாழ்வும் வற்றாது விளங்கிவரும் வண்டமிழ் சோழ நாட்டில் அமைத்த தேவரப்பதிகம் பெற்ற திருத்தலங்கள் 274 என்பர். அவற்றுள் காவிரிக்குத் தென்பால் அமைந்தவை 127 திருதலங்களாகும். அதிர்காணும் சிறப்புமிக்க திருத்தலங்களுள் திருநாகேஸ்வரம் 47-வது தலமாக அமைந்துள்ளது.
இத்தகு நற்சிறப்பமைந்த சோழநாட்டின் நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டத்தில் பூமருவு கங்கை முதல் புனிதமாம் நதி பலவும், மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் பெற்றித்தாகிய கும்பகோணத்திற்கு கிழக்கில் மூன்று கல் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேச்சுரம் ஆகும். அது தேவார ஆசிரியர்கள் மூன்றாலும் மேன்மையுற்ற மக்களுயிர்க்கு உறுதி பயக்குமாண்பிற் சிறந்து விளங்குவது. சிவமேயத்தொண்டர் அன்பெலாந் திரண்டு ஓருருவெடுத்த சேக்கிழார் பெருமான் நிறைந்த பெருங் காதல்கொண்டு இத்தலத்திலே விளங்கிய தன்மையை உமாபதி சிவாச்சாரியார் "தனது பேரும் உத்தம சோழப் பல்லவன்றானென்று முயர்பட்டங் கொடுத்திட வாங்கவர் நீர்நாட்டு நித்தனுறை திருநாகேச்சரத்திலன்பு நிறைதலினான், மறவாத நிலைமை மிக்கார்" என்று அருளுகின்றார்.

திருக்கோயிலமைப்பு

திருக்கோயிலமைப்பு

"உயரும் நறவார் பொழில் நாகேச்சரநகருள் அறவா என வல்வினை ஆசறுமே" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். சுற்றிலும் சோலைகள் சூழ கிழக்கு நோக்கியமைந்த இத்திருக்கோயில் ஏழுகோபுரங்களும், ஐந்து பிரகாரங்களும், தேரோடும் நான்கு வீதிகளும் கொண்டு விளங்குகின்றது. ஐந்து நிலைகளையுடைய கிழக்குகோபுர வாயிலின் வழியே உள்நுழைந்தவுடன் முன்னே நிருத்தகணபதி, நந்திதேவர், விநாயகர் காட்சி தருகின்றனர். இடப்பால் சூரிய திருக்குளத்தின் அருகில் மழுப் பொறுத்த விநாயகர் சந்நிதியில் அவரை வணங்கிக் கொண்டு உள்கோபுர வாயிலை அடைகிறோம். இக்கோபுர வாயில் அருகாமையில் "கணநாதர் ரகசியம் " அமைந்துள்ளது ஒரு காலத்தில் இத்திருகோயிலை தரிசிக்கமுடியாதவாறு தீய சக்திகள் வளம்வந்துகொண்டிருந்தன. அவற்றை அடக்கி வைப்பதற்காக இங்கு நெரூர் சதாசிவ பிரமேந்திரர் "எந்திரம் " ஒன்றை உள்ளே வைத்துள்ளதாகவும் இந்த எந்திரம் ரகசியமாக உள்ளதாகவும் செவி வழிச்செய்தி கூறுகிறது இந்த பிரகாரத்து மதிற்சுவர்களை ஒட்டி சுற்றிச் சென்றால் அலங்கார மண்டபத்தையடைகிறோம். இந்த அலங்கார மண்டபத்தில் வெளிப்புறத்தில் வியக்கும் வண்ணம் உள்ளது. அங்கே வாகனங்களும் காட்சி தருகின்றன. நவகோள்கள் சந்நிதியும் உள்ளது. எட்டுகோள்களும் சூரியனை பார்க்கும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.
மூலவர் அமைந்த கருவறையை அடுத்த முதல் பிரகாரத்தில் மேல்புறத்தில் சந்திரசேகர், ஆதி விநாயகர், சந்நிதி உள்ளது. இவ்விநாயகர் இத்திருக்கோயிலின் ஆதியிலிருந்த விநாயகர் ஆதலால் ஆதிவிநாயகர் என வணங்கப்படுகிறார். அருள்மிகு இராகுபகவான் உற்சவர். ஆறுமுகன் சந்நிதி, பஞ்சலிங்கம், இலக்குமி, சரசுவதி முதலிய சந்நிதிகள் உள்ளன. இச்சந்நிதிகளுக்கு நேரெதிரே குபேர கிணறு உள்ளது. இக்கிணற்றில் காசுகளையிட்டால் செல்வம் சேர்வதாக கூறப்படுகிறது. அதன் அருகாமையில் திரியுக சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. ஒரு யுகத்திற்கு ஒரு சாண்டிகேஸ்வரராக மூன்று யுகங்களுக்கும் மூன்று சண்டிகேஸ்வரர்கள் ஒரே சந்நிதியில் உள்ளனர். இத்திருக்கோயிலில் மட்டுமே இத்தகைய அமைப்பு காணப்படுகிறது. வடபுறத்தில் அறுபான்மும்மை நாயன்மார்கள், ஆடல் வல்லான் சந்நிதிகளும், பள்ளியறையும் உள்ளன. பிறையணிவாள்நுதல் அம்மை சந்நிதியானது நாகநாதசுவாமி சந்நிதிக்கு இடப்பக்கம் உள்ளது. தென்பால் சேக்கிழார், பாலறாவாயர், அவர் தாயார் அழகாம்பிகை, நால்வர் சப்த கன்னிகையர் சந்நிதிகளும் உள்ளன. சேக்கிழார் சந்நிதிக்கு வலப்பால் அமைந்துள்ள அதிகார நந்தி காண அரியதொன்று.

மூர்த்தியும் தீர்த்தமும்

மூர்த்தியும் தீர்த்தமும்

இத்தலத்து விநாயகர் செண்பக விநயாகர் என்றும் சான்று விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். சிவபெருமான் கட்டளைப்படி முதலில் தன்னைப் பூசித்து வழிபடச் சான்றாக விளங்கியதால் சான்று விநாயகர் என்றழைக்கப்படுகிறார். மூலவருக்கு நாகநாதர், நாகேச்சரர் எனும் பெயர்கள் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பாகவான் சந்நிதி உள்ளது. கல்வெட்டுகளில் சுவாமிக்கு சண்பகாரண்யேசுவரர், திருநாகேஸ்வரம் உடையார், மகாதேவர் முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. தலத்துக்குரிய விருட்சம் சண்பகமரம்.
இத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்களுள்ளன என்பர். அவை முறையே சூரிய தீர்த்தம், யம தீர்த்தம், சந்திர தீர்த்தம், அகீனி தீர்த்தம், துர்க்கா தீர்த்தம், கௌதம தீர்த்தம், பராசர தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், கண்வ தீர்த்தம், வசிட்ட தீர்த்தம் என்பன. சூரிய கோயிலினுள் உள்ளது. அது சூரியனால் அமைக்கப்பட்டதென்பர்.

தலப்பெருமை

தலப்பெருமை

"பொன் பொலியும் திருநாகேச்சர நகரம் இதன் பெருமை புகலப்போமா" என்று திருநாகேச்சரப் புராண ஆசிரியர் போற்றுகின்றார். தொண்டர்தம் பெருமைதனைச் சுவை ததும்பத் தந்த தமிழ்ச் சிந்தைமிகு சேச்கிழார் திருவடி ஞானம் பெற்ற இத்தலமாண்பினை எவர் விவரிக்க வல்லார். தேவார ஆசிரியர்களும் சேக்கிழாரும், அருணகிரியாரும் இன்னும் அளவிறந்த அடியார்களும் போற்றிப் பணிந்த இத்தல மாண்பினைத் தமிழில் பாட்டிடை விரவிய உரைச் செய்யுளால் திருநாகேச்சுரப் புராணம் என்று மூவல் ப.சிங்காரவேல் பிள்ளையவர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.
இப்புராணம் வடமொழி மூலத்தினின்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. நாகராசன் ஓர் சிவராத்திரியில் நான்கு யாமங்களில் முதல் யாமத்தில் வில்வவனமான குடந்தைக் கீழ்க்கோட்டத்திலும் மூன்றாவதில் வன்னிவனமான திருப்பாம்புரத்திலும் நான்காம் யாமத்தில் புன்னை வனமான நாகைக் காரோணத்திலும் வழிபட்டுப்பேறு பெற்றான். இந்த நான்கு தலங்களும் நாகராசன் பெயராலேயே வழங்கப்படுதல் கண்கூடு.

சிற்பங்கள்

சிற்பங்கள்

இக்கோயிலின் பழமையைப் புலப்படுத்தும் பல சிற்பங்கள் உள்ளன. சுவாமி கோயில் மண்டபத்திலும் முன் மண்டபத்திலும் இவற்றைக் காணலாம். முன் மண்டபத் தூண்களில் குதிரை, சிங்க வடிவங்கள் உள்ளன. சுவாமி கோயில் பிரகாரத்தில் கீழே சிங்கமும் மேலே தூணுமாக பல தூண்கள் உள்ள. அதிகார நந்தி, சேக்கிழார், நால்வர், பயிரவர், ஆடல்வல்லான் உருவங்கள் கண்ணுக்கினியன. அம்மன் கோயிலில் துவாரபாலகர்கள் கத்தியும் கேடயமும் அமைக்கப்பட்டு கல் சக்கரங்கள் தேர்போன்று அமைக்கப்பட்டு கல் சக்கரங்கள் பொருத்தப் பெற்றுள்ளன. அடிவரிசையில் பரதக்கலை சிற்பங்கள் பல உண்டு. முருகப்பெருமான் வடிவமும், ஆறுமுகர் உற்சவ வடிவமும் காணவேண்டிய தொன்றாகும்.
இத்தலத்துத் திருநாவுக்கரசர் திருத்தாண்டகம் பயில்தொறும் பக்திச்சுவை நனி சொட்டச் செய்து பரம்பொருளில் ஆழ்த்தும் பெற்றியது. தலப்பெருமானுடைய பண்புகளை நச்சுவார்க்கினியர், நாடறிபுகழர், நற்றுணையாவர், நம்புவார்க்கன்பர், நாகநாடுடையார், நேசர்க்கு நேசன். என்று பலபடக் காட்டுகின்றார். இந்நூலின் பிற்பகுதியில் இத்தலப்பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளமை காண்க.

கோயில் விவரங்கள்

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் திருக்கோவில்,
ராகு ஸ்தலம்

திருநாகேஸ்வரம் - 612 204

+91- 435-2463354

விரைவு இணைப்புகள்

வரலாறு

திருவிழா

தொடர்பு இணைப்புகள்

தொடர்பு

Top